×

சென்னை புதிய விமான முனையத்தில் பரபரப்பு 7 அடி கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை

சென்னை, அக்.26: சென்னை புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்தில், சுமார் 7 அடி உயர கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், அதிநவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அந்த முனையத்தில் புறப்பாடு பகுதியில், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் செல்வதற்கான தனிவழி உள்ளது. அந்த வழியில், விமான பயணிகள் பயன்படுத்துவதற்கான டிராலிகள் மற்றும் உணவுகள் எடுத்துச் செல்லப்படும்.
இந்நிலையில் நேற்று அவ்வழியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 7 அடி உயர கண்ணாடி கதவு, திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. அந்தக் கண்ணாடிகள் உறுதியான தன்மையுடன் அமைக்கப்பட்டிருந்ததால், சிதறி விழாமல் கதவிலேயே இருந்தது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து, உடைந்து நொறுங்கிய கண்ணாடி கதவை ஆய்வு செய்தனர். அதோடு அந்தக் கதவை மாற்றிவிட்டு வேறு கதவு அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்நிகழ்வு குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, டிராலிகள் அல்லது உணவுகளை எடுத்து செல்லும் டிராலிகள், கண்ணாடி கதவு மீது மோதி உடைந்து நொறுங்கி இருக்கலாம், விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்று ஆய்வு செய்து, கண்ணாடிக் கதவு உடைந்ததற்கு காரணமான ஏஜென்சி நிறுவனம் எதுவென்று கண்டுபிடித்து, அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த 2013ல் திறக்கப்பட்ட புதிய உள்நாடு, சர்வதேச முனையங்களில் இதேபோல் கண்ணாடி கதவுகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கண்ணாடிகள், விமானநிலைய மேற்கூரைகள் என்று 85 முறைகளுக்கு மேல் தொடர்ந்து, உடைந்து விழுந்து விபத்துகள் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதைபோன்ற பிரச்னைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தில், முதல் முறையாக நேற்று ஒரு கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியுள்ளது. இது மனித தவறால் நடந்தது, ஏற்கனவே பழைய முனையங்களில் நடந்த கண்ணாடி உடைந்த சம்பவங்களுக்கும் இதற்கும் வேறுபாடுகள் உள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post சென்னை புதிய விமான முனையத்தில் பரபரப்பு 7 அடி கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கியது: அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai's New Integrated Airport ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...